மதுரை பொன்மேனி அருகேயுள்ள நியாய விலைக்கடையில் தமிழ்நாடு அரசின் மளிகைப் பொருள் தொகுப்புத் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரத்து 486 முழுநேர நியாய விலைக்கடைகள் உள்ளன. மொத்த கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், சிறு பல்பொருள் அங்காடிகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாகவும் இன்றிலிருந்து ரூ.500 மதிப்புள்ள 19 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. வெளிச் சந்தையில் இதன் விலை ரூ.597 ஆகும்.
வெளிச் சந்தையின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த மளிகை தொகுப்பை கூட்டுறவுத்துறை அறிமுகம் செய்கிறது. உற்பத்தியாகும் இடங்களிலேயே கொள்முதல் செய்து, எந்தவித லாப நோக்கமின்றி இப்பொருட்கள் பொதுமக்களின் நலன் கருதி வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமன்றி, யார் வேண்டுமானாலும் இத்தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.
இதில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், புளி, பொரிகடலை, மிளகாய் வத்தல், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, எண்ணெய், பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள் என குடும்பத்திற்குத் தேவையான அனைத்து மளிகை பொருட்களும் இடம் பெற்றுள்ளன. இதனை தனித்தனியாகவும், சில்லறையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
மளிகைப் பொருட்கள் தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்தவுடன், இதனை செயல்படுத்துவது கடினம் என்று சிலர் விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது தாங்கள் இதனை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம்", என்று தெரிவித்தார்.
இதையும் பார்க்க: ஊரடங்கு தளர்வு: மத்திய அரசின் பரிசீலனை ஏற்று தளர்வுகளின் புதியக் கட்டுப்பாடுகள்!