மதுரை ஆண்டாள்புரம் வசுதரா குடியிருப்பு பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மதுரை மாநகராட்சி சார்பில் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடியிருப்பு வளாகங்களில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகின்றன. நாளை முதல் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளது. மதுரையில் கரோனா சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் அதிக சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்திய மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார்.
அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். காய்கறி சந்தை, இறைச்சி கடைகளுக்குச் செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்து செல்லவேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதையும் உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் முழு ஊரடங்கு குறித்து அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், "இதுவரை மருந்து கண்டுபிடிக்காத கரோனா தொற்றிலிருந்து மீள அரசு கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இந்திய மருத்துவம்தான் கரோனா எதிர்ப்பிற்கான பொக்கிஷம். இதுவரை அரசுக்கு மக்கள் கொடுத்துவரும் ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாதது அமைச்சர்களையும் பாதிக்கும் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா