மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் ஐசியூவில் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் நிதியமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு சின்ன துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. தற்போது தமிழ்நாட்டு மக்கள் அவரை துரும்பாக பார்க்கிறார்கள். அவர் கருத்துக் கூறாமல் இருப்பது நல்லது.
இப்படிப்பட்ட கருத்துகள் கூறுவதன் மூலமாக தான் அரசியலில் இருக்கிறேன் என்று கூற முடியுமே தவிர, வேற எதையும் அவரால் அடையாளப்படுத்த முடியாது. கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "கடந்த வருடம் நிதி நிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கியதை விட இந்த வருடம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கடன்கள் அதிகமாகத்தான் இருக்கும். பல தலைமுறைகளாக, அரசு பட்ஜெட்டில் மக்கள் மீது கடன் சுமையை திணிக்கப்படுகிறது என்று தான் சொல்வார்கள்.
ஆனால், இதுவரை மக்களை யாரும் கடனை திருப்பி செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் அரசுதான் இந்த கடனை அடைக்கும். அரசு, கடன் தொகை ஒவ்வொரு குடிமகன் தலையில் சுமத்தப்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றார்.