மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1.2 கோடி செலவில் உருவான 16 கட்டண மருத்துவ படுக்கைப் பிரிவுகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச்.2) தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் ராஜாக்கூர், குமராபுரம், கீழப்பட்டி, பெரியபூலான்பட்டி, வலையங்குளம் ஆகிய ஊர்களில் புதிய துணை சுகாதார நிலையங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை மத்திய அரசின் நிதி ஆதாரத்துடன் திட்டமிட்ட நிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற நிறுவன நிதி உதவி என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் 8 முறைக்கு மேல் தொடர்ந்து நாங்கள் பேசியுள்ளோம். கடந்த மாதம் ஜப்பான் சென்றபோது ஜைகா நிறுவனத்தின் துணைத்தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். தொடர்ச்சியாக ஜைகா நிறுவனத்துடன் தொடர்பில் இருத்தல், பணிகள் குறித்து கலந்தாலோசித்தல், நேரடிக் கள ஆய்வு போன்ற பல்வேறு விசயங்களை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் ஜைகா நிறுவனத்தின் நிதியை தொடர்ச்சியாகப் பெற முடியும். தமிழக அரசின் சார்பில் கட்டப்படுகின்ற பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளுக்கு ஜைகா நிறுவனம் தொடர்ந்து நிதி அளித்து வருகிறது. அதற்கான அறிக்கைகளையும் அந்நிறுவனத்திற்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பி வருகிறார். மத்திய அரசில் இதுபோன்ற தொடர் ஆய்வுகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படாததால் எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் ஆலோசனை நிறுவனங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். ஆகையால் வருகின்ற 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் தான் கட்டுமானப் பணிகள் துவங்கும்.
குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும் அப்பணிகள் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும். மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது என்றார். இந்நிகழ்வின் போது அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதலமைச்சரிடம் சென்ற புகார் கடிதம்