மதுரை: மதுரையைச் சேர்ந்த பசும்பொன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் "மதுரை, திருப்பரங்குன்றம் தாலூகா நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பாண்டிய மன்னர் காலத்தில் அமைந்த மதுரையின் மிகவும் பழமைவாய்ந்த கண்மாய் ஆகும். இந்த கண்மாய் பிரதானமாகக் கொண்டு நிலையூர் மற்றும் கூத்தயார்குண்டு பகுதியில் பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் ஆகாரமாகவும் காணப்படுகின்றது. ஆனால், தற்போது இந்த நிலையூர் கண்மாயை அரசு தரப்பில் மீன் பிடிப்பதற்குக் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றது. கண்மாயில் மீன் பிடிப்பதற்காகக் குத்தகைக்கு எடுக்கும் நபர்கள் சட்டவிரோதமாகத் தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குத் திறந்து விடுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் சேதமடைந்து நிலையூர் பகுதியைச் சுற்றி உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் பறவைகளை விரட்டுவதற்கு வெடி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கண்மாய் தண்ணீர் மாசு அடைகிறது, சட்டவிரோதமாகத் தண்ணீர் திறந்து விடுவதால் கண்மாய் மதகுகளும் பாதிக்கப்படுகிறது. விவசாயத்திற்குத் தேவைப்படும் நேரம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அலுவலர்கள் மீன் பிடித்தல் குத்தகையை ரத்து செய்தும், மீன்பிடிப்பதற்காக குத்தகை தாரர்கள் கண்மாயின் தண்ணீரைச் சட்டவிரோதமாகத் திறந்து விடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், நிலையூர் கண்மாயிலிருந்து தண்ணீரைத் திறந்து விவசாய நிலங்கள் சேதம் அடைவதைத் தடுக்கும், நிலையூர் கண்மாயில் தண்ணீரைச் சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று (மார்ச்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மீன்வளத்துறை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலையூர் கண்மாயில் தண்ணீர் திறப்பதால் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் மீன்வளத்துறை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புதிய மனு அளிக்க வேண்டும். மனுவினை அலுவலர்கள் பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.