மதுரையை சேர்ந்த சித்த வைத்தியர் முனியாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ உலக அளவில் கரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ளது.
இதில் பல லட்சம் மக்கள் பாதிப்படைள்ளனர். பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வைரஸ் சுவாச பாதையை பாதித்து உடலில் பிரச்னை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் நோயை குணமாக்க 30 மூலிகை கொண்ட மருந்து தயாரித்துள்ளேன். இது தொடர்பாக பிப்ரவரி 28ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே, எனது மருந்தை பரிசோதித்து கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து தமிழ்நாடு சித்த மருத்துவ கழக செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 29ஆம் தேதி ஒத்திவைத்தார்.