மதுரை: பாண்டிகோவில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகம் சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, 549 பயனாளர்களுக்கு சுமார் 4.50 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கினர்.
இதனைதொடர்ந்து கிழக்கு தாலுகாவிற்குட்பட்ட 91 பயனாளர்களுக்கு, 63.70 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர்கள் வழங்கினர்.
சமுதாய முன்னேற்றம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுகவின் அடிப்படைக் கொள்கையான பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் முறையே, சமுதாய முன்னேற்றம் அடைந்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 18 வயது கீழ் பெண்கள் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் உள்ளது. ஆனால் வடமாநிலங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் கல்வி பெறாமல் இருந்து வருவதால், அங்கு பொருளாதார வளர்ச்சி இல்லை. மற்ற வடமாநிலங்களை விட தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதற்கு இம்மாதிரியான திட்டங்கள் தான் காரணம்.” என்றார்.
பெண்கள் முன்னேற்றம்
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி, “பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண சுயஉதவிகுழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டன. இன்றைக்கு தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” என்றார்.
வெள்ளை அறிக்கை
“பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அரசாக திமுக திகழ்ந்து வருகிறது. தற்போது மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் சூழலிலும் பத்தாயிரம் கோடி ரூபாய் வரையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விரைவில் நிதிஅமைச்சர் தமிழ்நாடு அரசின் 5 லட்சம் கடனுக்கான வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து பொருளாதார இடர்பாடுகளும் சீர் செய்யப்படும். மேலும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். அனீஸ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கார்த்திக்கேயன் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம்