இன்றைக்கு, சரியாக 97 ஆண்டுகள் 10 மாதங்கள் 24 நாட்களுக்கு முன்பாகதான், காந்தியடிகளின் உலக அடையாளமாய் மாறிப்போன அரையாடை தோற்றம் நிகழ்ந்தது. அப்படியொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளத்திற்கு வித்திட்ட மண்தான் மதுரை.
இந்திய விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற நேரம் அது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டும் பெரும் முயற்சியில் இந்தியா முழுவதும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை நகருக்கு வந்தார்.
அந்த ஆண்டு மதுரையைச் சுற்றியிருந்த பல்வேறு ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்த அவர், உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் ஏற்பாட்டின் பேரில் மதுரை மேலமாசி வீதியிலுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜி-கல்யாண்ஜி என்பவரின் வீட்டின் மேல்மாடியில்தான் தங்கினார்.
திண்டுக்கல்லிலிருந்து ரயிலில் மதுரைக்கு திரும்பும்போதுதான் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்நிலை கண்டு மனம் வருந்திய நிலையில், மதுரை சோழவந்தான் அருகே வந்து கொண்டிருக்கும்போது அவருக்குள் உண்டான தீர்க்கமான ஒரு மனநிலையினால் செப்டம்பர் 22ஆம் நாள் அரையாடை விரதம் பூண்டார்.
காந்தி கிராம, கிராமிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'காந்தியடிகள் மதுரைக்கு வந்த ஐந்து வருகையும் மிக முக்கியத்துவமானதாகும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாய் அமைந்தது 1921ஆம் ஆண்டு நிகழ்ந்த வருகை. அப்போதுதான் அரையாடை விரதம் பூண்ட நிகழ்வு நடைபெற்றது. மதுரையில் தொடங்கியிருந்தாலும், தனது இறப்பு வரை அந்த விரதத்தைக் கடைப்பிடித்தார் மகாத்மா' என்கிறார்.
மகாத்மா காந்தி தலைமையில் அன்றைய காலையின் முதல் பரப்புரைக் கூட்டம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஒரு திடலில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்தான் இந்திய மக்களின் வறுமை நிலை தீரும் வரை தான் இந்த அரையாடை விரதத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்தார். காந்தியடிகள் உரையாற்றிய அந்த இடம் இன்றைக்கு 'காந்திப் பொட்டல்' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
அக்குறிப்பிட்ட இடத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காந்தி சிலை ஒன்றை காங்கிரஸ் உறுப்பினர்களும், சிவாஜி ரசிகர்களும் இணைந்து அமைத்தனர். இந்த சிலை அமைப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசனும் பண உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வோதயம், கிராமராஜ்யம் இதழ்களின் ஆசிரியரும், சர்வோதய இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான கா.மு.நடராஜன் கூறுகையில், 'காந்தியின் கடைசி வருகை நிகழ்ந்த 1946ஆம் ஆண்டு, மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் அவர் உரையாற்றுவதாக இருந்தது. கூடியிருந்த மக்கள் பெரும் குரலெழுப்பினர். காந்தியும், ராஜாஜியும் எவ்வளவோ வேண்டுகோள் வைத்தும் கூட்டம் கேட்டபாடில்லை. ஆகையால் வருத்தம் கொண்ட காந்தியடிகள் அக்கூட்டத்தில் உரை நிகழ்த்த மறுத்துவிட்டார்.
அந்த வருகையின்போதுதான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் காந்தியடிகள் சென்றார். அப்போது அம்மன் சன்னதிக்கு எதிர்புறம் இருந்த ஒரு ஸ்டுடியோ ஒன்றின் மாடியிலிருந்து காந்தியைப் பார்த்து பரவசம் கொண்டேன்' என்கிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் பல்வேறு நிகழ்வுகளின் பொருட்டு மதுரைக்கு 5 முறை வருகை தந்துள்ளதாகப் பதிவுகள் உள்ளன. வெள்ளையராட்சி கொண்டு வந்த ரௌலட் அடக்குமுறை சட்டத்திற்கு எதிராகத் தொண்டர்களைத் திரட்டுவதற்காக முதல் முறை மதுரை வந்த காந்தியார் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் வைகைக் கரையோரம் இருந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோஸப் மாளிகையில் தங்கினார். தற்போது தனியார் ஜவுளிக்கடையாக மாற்றம் கண்டுள்ளது.
இரண்டாவது முறையாக மதுரை வந்தபோது அரையாடை விரதம் பூண்டார். மூன்றாவது முறையாக 1927ஆம் ஆண்டு செப்டம்பரில் சுதேசி இயக்கத்தை நாடு முழுவதும் கொண்டு சென்றார். அப்போது மதுரை செல்லூர் பகுதியில் இருந்த சிவகங்கை மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான மாளிகையில் தங்கினார். அது தற்போது மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியின் பயன்பாட்டில் உள்ளது.
அகில இந்திய அளவில் நடைபெற்ற ஹரிஜன யாத்திரையின்போது 4ஆவது முறையாக தக்கர் பாபா, மீரா பென் ஆகியோருடன் வந்திருந்த காந்தியடிகள், மதுரை முனிச்சாலை சேர்மன் முத்துராமைய்யர் சாலையில் அமைந்திருந்த என் எம் ஆர் சுப்பாராமன் இல்லத்தில் தங்கினார். அதன் நினைவாக அவ்வீட்டின் முகப்பில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளதை தற்போதும் காணலாம். பழமை மாறாமல் என்எம்ஆர் சுப்பராமன் குடும்பத்தார் அவற்றை பராமரித்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்காக 5ஆவது முறையாக 1946ஆம் ஆண்டு பிப்ரவரியில் மதுரை வந்த காந்தியடிகள் மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் அமைந்திருந்த கட்சிப் பிரமுகர் இல்லத்தில் தங்கினார். தற்போது அந்த இடம் டாஃபே நிறுவன வளாகமாக மாறியுள்ளது.
அதே மதுரையில்தான் இந்தியாவிலேயே முதன் முறையாக காந்தியடிகளின் நினைவைப் போற்றும் விதமாக கடந்த 1959ஆம் ஆண்டு காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், 'தமிழர்களின் மீது காந்திக்கு அளவில்லாத பற்று இருந்தது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் காந்திக்கு தோளோடு தோள் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள். அதனாலே தமிழ் மொழியின் மீதும் அவருக்கு மிகுந்த பற்றுதல் இருந்தது.
தமிழில் காந்தியார் கைப்பட எழுதிய கடிதங்கள் உள்பட, அவரது இறுதி நாட்களில் சுடப்பட்டு கிடந்தபோது உடுத்தியிருந்த அவரது ரத்தக்கறை படிந்த ஆடையும், பயன்படுத்திய பொருட்களையும் இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம்' என்கிறார்.
இத்தனை நினைவுகளோடு மகாத்மாவின் மதுரை நிகழ்வுகள் இருந்தாலும், உலக அடையாளமாக மாறிய அவரது அரையாடை விரதம், மதுரையை எப்போதும் நினைவுப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். அந்த வரலாற்றுத் தடத்திற்கு ஒருபோதும் அழிவு நேர வாய்ப்பில்லை.