மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட எட்டு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர்தான் விசாரணை என்ற பேரில் அழைத்துச்சென்று அடித்துக் கொன்றுள்ளனர் என்று கூறி பாலமுருகனின் உறவினர்கள் இன்று காலை அரசு இராசாசி மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பாலமுருகனின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலமுருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: லாக்-அப்பில் இளைஞர் கொலை? - சிசிடிவி பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு