மதுரை ஆத்திகுளம் அருகே உள்ள தனது வீட்டின் முன்பாக நாள்தோறும் வரையும் கோலத்தின் மூலமாக கரோனா வைரஸ் தொற்று குறித்தும், மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், உண்ணவேண்டிய பாரம்பரிய உணவுகள், பயன்படுத்த வேண்டிய மூலிகைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்துகிறார் போதிலட்சுமி.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, “பாரம்பரியமாய் வீடுகளின் முன்பாக கோலம் வரைவது நமது தமிழர் மரபு. அந்த மரபை கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வுக்கு பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தேன்.
அதன் காரணமாய் இந்தக் கோலத்தைப் போட்டுள்ளேன். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். ஆகையால், தனிப்பட்ட முறையில் என்னால் இயன்ற வழியில் இந்த விழிப்புணர்வுப் பணியை மேற்கொள்கிறேன்” என்றார்.
இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்ற பெண்மணி கூறுகையில், “ஜோதிலட்சுமியின் இந்த யுக்தி இப்பகுதி மக்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தந்துள்ளது. நாள்தோறும் இப்பகுதியைச் சேர்ந்த பலர் இங்கு வந்து விழிப்புணர்வு வாசகங்களை வாசித்துவிட்டு செல்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒரு கருத்து என்பதால், இதனை எங்களது பகுதியில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு பெண்களுக்கும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்” என்றார்.
நாட்டின் தற்போதைய நிலைக்கருதி தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பணிகள் பெரிதும் பாராட்டுக்குரியதுதான்.
இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி