மதுரை: பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நெல்லையில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் வந்தே பாரத் அதிவேக ரயிலை துவக்கி வைத்தார். தென் மாவட்ட மக்களிடையே இந்த ரயில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரம் முன்னதாக சென்னை - நெல்லை இடையே பயணிக்கும் வகையில் ரயிலின் வேகம் இருந்ததால் பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 46 ஆண்டுகளாக மதுரை மக்களுக்கு பகல் நேரத்தில் அதிவிரைவுடன் குறைந்த கட்டணத்தில் சென்னை செல்லும் கனவு ரயிலாக வலம் வரும் வைகை எக்ஸ்பிரசின், தற்போதைய பயண நேரம் 15 நிமிடங்கள் கூட்டப்படுவதாக வெளியான தகவல் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு, 7 மணி 15 நிமிடங்களில் சென்னைக்கு சென்றும், அதே வழித்தடத்தில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு, 7 மணி 25 நிமிடங்களில் மதுரைக்கு சென்று கொண்டு இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், தற்போது 15 நிமிட பயண நேரம் வித்தியாசம் ஏறபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ரயிலுக்காக வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த ரயில் பயண நேர மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதுகுறித்த கால அட்டவணை ரயில்வேயின் 'நேஷனல் டிரெய்ன் என்கொயரி சிஸ்டம் (National Train Enquiry System - NTES) ' என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடியது. அப்போது, வைகை எக்ஸ்பிரசின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், இதனை தெற்கு ரயில்வே படிப்படியாக நிறைவேற்றும் என நம்புவதாக ரயில் பயணிகள் தெரிவித்து இருந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் மாற்றம் அடைவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும், இந்த நேர அட்டவணையை மீண்டும் பழைய முறையில் மாற்றியமைத்து, வைகை எக்ஸ்பிரஸ்சின் பயண நேரத்தை முன்னர் இருந்தவாறே திட்டமிட வேண்டும் எனவும், சென்னையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண அட்டவணையை அரை மணி நேரம் முன்னதாக மாற்றினால், மதுரைக்கு 8.30 மணிக்குள் வந்து சேர்வதுடன், மதுரையில் இருந்து புறநகர் மற்றும் அண்டை மாவட்டங்களுக்குச் செல்லக்கூடியவர்கள் இரவு விரைவாக வீடு திரும்ப ஏதுவாக இருக்கும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..!