இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாகப் பேராசிரியர்கள் முரளி மற்றும் சீனிவாசன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், "தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் கட்டாயமாக ஆன்லைன் தேர்வுகளை எழுத வேண்டும் என அரசு முடிவு செய்து உள்ளது. அதை ஒட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது. செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இறுதிக்கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று கூறி அதற்கான கால அட்டவணையையும் அளித்துள்ளது. இதில் மாணவர்களுக்கு அவரவர்கள் துறை சார்பாக கேள்வித்தாள்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தேர்வுகளை வீட்டிலிருந்தபடியே a4 தாளில் எழுதி அதை பிடிஎஃப் நகலெடுத்து ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தேர்வு அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மாணவர்கள் நேர்மையாகக் காப்பி அடிக்காமல் எழுதினார்கள் என்பதை உறுதி கூறும் வகையில் அவர்களின் பெற்றோர்கள் கையொப்பமிட வேண்டும் என்று கூறப்பட்டது.
பின்னர் எழுதப்பட்ட தாள்கள் தபால் மூலமாக தேர்வு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும், இந்த அவசர தேர்வு முறை என்பதை மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. கல்வியை இவ்வளவு மோசமான ஒரு கேலிப் பொருளாகப் பல்கலைக்கழகங்களும், அரசும் மாற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. ஒருபுறம் நீட் தேர்வுகள் கடுமையான கண்காணிப்புடன் பல லட்சம் பேர் பங்கேற்று நடந்து கொண்டிருக்கிறது மறுபுறம் கலை அறிவியல் கல்லூரிகளில் இறுதித் தேர்வு என்பது அவரவர் வீட்டிலிருந்து எழுதி அனுப்ப வகை செய்யப்பட்டிருப்பது என்பது கல்வியை அவர்கள் விருப்பப்படி கையாளுகிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்திய எல்லோரும் பாஸ் ஆகி விட்ட நிலையில், இப்போது கேள்வித்தாளை வாட்ஸ் அப்பில் பார்த்து பதிலை வீட்டிலிருந்தே எழுதி அனுப்பலாம் என்பது எந்த வகை கல்வி முறை என்று தெரியவில்லை.
இறுதி ஆண்டு மாணவர்களை மட்டும் வரவழைத்து கல்லூரிகளில் தேர்வு எழுதச் சொல்லி இருக்கலாம். கரோனா பாதுகாப்பு என்ற பெயரில் ஆன்லைன் கல்வி என்று சொல்லிக் கொண்டு மாணவர்களை பேப்பர்களில் தேர்வு எழுத வைத்து அதை மதிப்பீடு செய்வது என்பது மொத்தத்தில் தேர்வு முறையை சீரழிக்கும் செயலாகும். மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் செயலாகும். இப்படி ஒரு தேர்வு எழுதுவதற்கு ஹால்டிக்கெட் வேறு அனுப்புவார்களாம், எதற்காக என்று தெரியவில்லை. இம்மாதிரி தேர்வு நடத்துவதைப் பல்கலைக்கழகங்கள் கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.
மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இதேமுறை கடைப்பிடிக்கப்படப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வாட்ஸ்அப் தேர்வு முறையை அரசு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உடனடியாக ரத்து செய்யுமாறு வேண்டுகிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.