மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. திருவாரூர் கமலாலய திருக்குளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 2-வது மிகப்பெரியது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும். மதுரை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் தான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது உருவாக்கியதே இந்த தெப்பக்குளம். தனது பிறந்த நட்சத்திரமான தைப்பூசம் அன்று திருக்குளத்தில் சொக்கநாதர் பிரியாவிடையோடு மீனாட்சி அம்மன் எழுந்தருளும் வகையில் இந்த விழா கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை 11 மணியளவில், பிரியாவிடையோடு மீனாட்சி சொக்கர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முதல் சுற்றாகத் திருக்குளத்தில் வலம் வந்த சப்பரம், சற்றேறக்குறைய 12 மணி அளவில் மரகதவல்லி முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரே நிலைக்கு வந்தது. அதேபோன்று பிற்பகலிலும் சப்பரத்தில் மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
மதுரை தெப்பத் திருவிழாவைப் பொருத்தவரை இரவில்தான் மின்னொளியில் மட்டுமன்றி பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் தெப்பத்தைச் சுற்றி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவெள்ளத்தில் சப்பரம் வலம் வரும் காட்சியைப் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கண்டு மகிழ்வது வழக்கம். அதேபோன்று இன்று மூன்றாவது சுற்றாக இரவு 8 மணி அளவில் ஒளி வெள்ளத்துடன் தெப்பத்தில் சப்பரம் வலம் வந்து இரவு 9 மணி அளவில் மீண்டும் நிலைக்கு வரும். பக்தர்கள் அனைவரும் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு அம்மன் மற்றும் சுவாமியைத் தரிசனம் செய்வார்கள்.