மதுரை தேனி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற கடந்த 2010ஆம் ஆண்டு, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
எனினும் தொடக்கத்தில் திட்டத்திற்கான நிதி போதுமான அளவு ஒதுக்கபடாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்திற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டதால் ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, முதல் முறையாக வரும் 27ஆம் தேதி, மதுரை – தேனி இடையே ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி மே 27ஆம் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் இருந்து மதுரைக்கு தினமும் மாலை 6.15-க்கு புறப்படும் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக மதுரை – தேனி இடையே ரயில் சேவை இல்லாத நிலையில், தற்போது ரயில் சேவை தொடங்கப்படுவதாக வெளியாகி உள்ள அறிவிப்பு மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு