மதுரை: தமிழகம் முழுவதும் யானைகள் வேட்டை மற்றும் வனக்குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் இருந்த 19 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலாதேவி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த குழுவில் தமிழக முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார், நீரஜ் உள்பட நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமித்துக் கொள்ளலாம் எனவும் நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு வன பாதுகாப்பு கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், மற்றும் மோகன் நவாஸ், ஏடிஎஸ்பி ஆகிய அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை தங்கள் விசாரணை குழுவில் நியமித்துக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை இந்த விசாரணை குழுவிற்கு தேவையான அனைத்து காரியங்களையும் தமிழக அரசு செய்துதர வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிபிஐ அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கடந்த மே மாதத்தில் இருந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை அடிப்படையில் தமிழக தடயவியல் துறை உதவியோடு, யானைகள் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது.
தங்களுக்கு தேவையான வசதிகளை நீதிமன்றத்தின் மூலம் பெற்ற சிறப்பு புலனாய்வு குழு, வழக்குகளில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் தொடர்பாக அந்த மாநில அதிகாரிகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் சேர்ப்பதற்காகவும் கோரி இருந்தது.இவ்வாறாக நிர்மலா தேவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஒரு வருடம் முதற்கட்ட விசாரணையை நடத்தி தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வன சட்டம் மற்றும் வன உயிரியல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 11 சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு செய்துள்ளது.குறிப்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் கூடலூர் காட்டுப்பகுதியில் யானைகள் தந்தத்திற்காக கொலை செய்யப்பட்டு இரண்டு தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற தேனி மற்றும் கேரளாவை சேர்ந்த நபர்கள் எட்டு பேர் மீது வன பாதுகாவலர் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு செய்துள்ளது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட தேனியைச் சேர்ந்த முருகன் ,வெள்ளையன், தங்கம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மேத்யூ, ஜான், ஜான்சன் ,நித்தின் அசோகன், அப்துல் அஜீஸ் கரட்டில், ஆகிய எட்டு பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மீதமுள்ள யானை உயிரிழப்பு தொடர்பான வழக்குகளையும், தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்ட யானைகள் தொடர்பான வழக்குகளையும், முதற்கட்ட விசாரணை முடிந்து அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்றரை மாதங்களில் போக்சோ குற்றத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை - விருதுநகர் போலீசாருக்கு குவியும் பாராட்டு