தென்னக ரயில்வே திருச்சி லோன் சொசைட்டி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் கண்ணையா பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வரும் இந்திய ரயில்வே கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகளை மத்திய அரசு தற்போது தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சித்து செய்துவருகிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு 150 ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
15 பெட்டிகள் கொண்ட ரயில்களை உடனடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த 40 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவில் உள்ள மிகப்பெரும் கம்பெனிகளுக்கும் அறிவிப்பு செய்துள்ளது. இந்த ரயில்களை அடுத்த 33 வருடங்களுக்கு அவர்களே பராமரிப்பு செய்யலாம்.
அதேபோல் தண்டவாள பராமரிப்பு ஓட்டுநர்கள் நியமனம் என அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்று விதிமுறைகளில் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 500 ரயில்கள் வரை தனியாருக்கு விற்பனை செய்யலாம் என்ற விதிமுறைகளை மேலும் தளர்த்தி உள்ளது.
இதுபோன்ற தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிக கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் தற்போதைய தொழிலாளர் சட்டங்களை திருத்தி இண்டஸ்ட்ரியல் ஒர்க்கர்ஸ் என்ற சொல்லக்கூடிய நிரந்தர பணியாளர்களின் பணிகளையும் கேள்விக்கு உள்ளாக்கப் போகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தருகின்ற அழுத்தத்தின்படி, மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
இதன் மூலம் இங்கு பணியாற்றும் ஊழியர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் இயக்கப்படுகின்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் இனி வருங்காலங்களில் இருமடங்காக உயர்த்தப்படும்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் இனி பயணம் மேற்கொள்வது என்பது மிகுந்த சிக்கலாக மாறும். தற்போது இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் 70 விழுக்காடு பேர் ரயிலில் உள்ள படுக்கை வசதிகளை பார்த்ததுகூட இல்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ரயில்வேயைத் தனியார்மயத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அடுத்த நான்கு மாதங்களில் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
தற்போதுள்ள மத்திய அரசு ரயில்வே லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க முயற்சி செய்கிறார்கள். இந்தியாவை முழுவதுமாக இணைப்பது ரயில்வே மட்டும் தான் ஆகையால் இதிலுள்ள தொழிற்சங்கங்களும் மிக வலுவாக உள்ளன.
அந்தச் சூழலை கெடுப்பதற்காகத்தான் தற்போது தொழிலாளர் சட்டத்தில் யூனியன்கள் குறித்தும், பல்வேறு திட்டங்களை இந்த அரசு கொண்டுவர உள்ளது. அதன்படி அனைத்து யூனியன்கள் 75 விழுக்காடு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வருகிறார்கள்.
30 விழுக்காடு பெரும்பான்மையாக இருந்தாலே ஆள முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. ஆனால் அதையே இந்த அரசு மாற்றவிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்களால் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்!