கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ள நிலையில், அதனை முழுமையாக நிறைவேற்ற அரசு இயந்திரங்கள் பல்வேறு வகையிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒருகட்டமாக, மதுரை மாநகர காவல் துறையின் கண்காணிப்பிற்குட்பட்ட மதுரை நகர், திலகர் திடல், திருப்பரங்குன்றம், தல்லாகுளம், அண்ணாநகர் சரகங்களில் ட்ரோன்களை பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று காவல் ஆணையர் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியிருந்தார்.
தல்லாகுளம் சரகத்திற்கு உட்பட்ட செல்லூர், அகிம்சாபுரம், திருவாப்புடையார் கோவில், ஆரப்பாளையம் ஜெயலலிதா பாலம், தத்தனேரி பகுதிகளில் ஐந்து ட்ரோன்கள் பயன்படுத்தி கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அதிகமாகத் தென்படும் இடங்களில் காவல் துறை உடனடியாகச் சென்று பொதுமக்களிடம் அறிவுறுத்தி அவர்களை கலைந்துபோக உத்தரவிடுகின்றனர்.
இன்று முதல் தொடங்கி, தடை உத்தரவு அமலில் உள்ள அனைத்து நாள்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என காவல் துறை ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து காக்க வேப்பிலை தோரணம்