மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டிலும் காணும் பொங்கலான நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது . பாதுகாப்புப் பணியில் 2 காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர்கள், 30 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், 80 ஆய்வாளர்கள் என மொத்தம் 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீரர்களுக்கும் காளைகளுக்கும் முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தாலும்; ஜல்லிக்கட்டு நடைபெறும் இன்றும் மறுமருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்பே தகுதியுள்ள காளைகள், வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .
மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம், வாடிவாசல், மாடுகள் நிறுத்துமிடம், வெளியேறும் இடம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, காளைகள், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யும் இடம், காளைகளுக்கும் வீரர்களுக்கும் தேவையான மருத்துவ குழுக்கள், மருத்துவ பரிசோதனைகள் செய்யும் இடம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காளையை அடக்குபவருக்கும் வெற்றிபெற்ற காளைகளுக்கும் வழங்கக்கூடிய கார், இருசக்கர வாகனங்கள், கட்டில்கள், பீரோக்கள், வெள்ளிக்காசுகள், தங்கக்காசுகள் உள்ளிட்ட பல பரிசுப்பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 936 வீரர்களும் இதுதவிர ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோரும் பாலமேட்டில் குவிந்து வருவதால் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டைப் பார்வையிட வரும் ரசிகர்களுக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: விளையாட்டு காட்டிய புதுகை மாடு... 14 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரம் விஜய்!