மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜபாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணத்தால் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் இதுவரை 12பேர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியன் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுருந்தார்.
அப்போது அங்கே ஆட்டோவில் வந்த 5பேர் கொண்ட மர்மகும்பல் எம்.எஸ்.பாண்டியனை ஓடஓட விரட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வெட்டியது. உயிருக்கு போராடியவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.