மதுரை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து ஆயிரத்து 295 கோடி ரூபாய் செலவிலான திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். இது மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கும் தடையின்றி தண்ணீர் தருவதற்கான நீண்டகால திட்டமாகும்.
இந்த தண்ணீரை விநியோகம் செய்வதற்காக மதுரை மாநகர் முழுவதும் கூடுதலாக 81 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உருவாக்கப்பட உள்ளன. அது போன்ற ஒரு தொட்டி மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட ஹார்விபட்டி பூங்காவில் அமைக்கப்பட உள்ளது.
இங்கு பெரும்பாலானோர் காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதாகவும், இப்பகுதியில் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தால் நடைபயிற்சி மேற்கொள்வது பாதிக்கப்படும் என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அப்பகுதியில் வசிக்கும் எம்.பி. சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
![சுவரொட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9822538_82_9822538_1607523064988.png)
இதையடுத்து, அவரைக் கண்டித்து மதுரை நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஹார்விபட்டி, எஸ்ஆர்வி நகர் மற்றும் இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், குடிநீர் பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு அமைக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்கவிடாமல் தடுப்பதாக எம்.பி. சு.வெங்கடேசனின் பெயரை குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.