மதுரை: சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மேல ஆடி மற்றும் வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருப்புகழ் மண்டபத்தின் அருகில் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்கத் திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6 மணியளவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அம்மனும் சுவாமியும் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்த பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடிய பிறகு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
இந்நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டர் வழி சிவாச்சாரியார் சிவேஷ் சங்கரப்பட்டர் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் ஹாலாஸ்ய நாதர் மீனாட்சியாகவும் வேடம் ஏற்று மாலை மாற்றித் திருக்கல்யாண காட்சியை நிகழ்த்தினர்.
அதன் பிறகு மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பெற்றது. பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும், மாங்கல்யமும் அணிவிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்குகள் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்வின்போது அரங்கில் குழுமியிருந்த பெண்கள் புதிய திருமாங்கல்யம் அணிந்து கொண்டனர். இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள், மணமக்களான மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்குத் திருமாங்கல்யம், பாட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய்யாகச் செய்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் குண்டோதரனுக்கு அன்னமிடல் எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், நிகழ்வில் பங்கேற்க வந்த பொதுமக்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனகர்த்தர், அமைச்சர் மூர்த்தி மற்றும் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்காக 2 ஆயிரம் காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் கோயிலைச்சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாண வைபவத்தைக் கண்டுகளிக்கக் கோயிலின் முன்பாக 20 இடங்களில் பெரிய எல்சிடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையும் படிங்க: 'அலங்காரப் பிரியர் மட்டுமல்ல... சமத்துவ நாயகரும்கூட...' - கள்ளழகரின் மற்றொரு பக்கம்!