மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற தீபாவளி (அக்டோபர் 27) முதல் கோயிலுக்கு வருகிற அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன் கூறியுள்ளார்.
திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலை போன்று தமிழ்நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகத்தலமாக கருதப்படுகிற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் நடைமுறை ஆன்மிக ஆர்வலர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்மாவட்ட ஆன்மிக சுற்றுலாத்தளங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே பக்தர்களுக்கு லட்டு வழங்குவது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாத அறிவிப்பு மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.