மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த போதிலட்சுமி என்பவர், தனது வீட்டு வாசல் முன்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு கருத்தியல் சார்ந்த கோலங்களை வரைந்துவருகிறார். கரோனா வைரஸ் (தீநுண்மி) தொடர்பான விழிப்புணர்வு கோலங்களை வரைந்து மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தார்.
அண்மையில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பப்ஜி விளையாடி உயிரிழந்தார். ஆகையால், இது குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி தனது வீட்டு வாசலில் கடந்த சில நாள்களாக கோலம் வரைந்துவருகிறார்.
இது குறித்து போதிலட்சுமி பேசுகையில், "செல்போனில் விளையாடுகின்ற பப்ஜி குழந்தைகள், மாணவர்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்தம், மனச்சோர்வு அவர்களை உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஆகையால், பப்ஜி விளையாடுவது மிகவும் தவறு என்பதை வலியுறுத்தி வீட்டு வாசல் முன்பாக கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்.
மேலும், மதுப்பழக்கம், பெண் சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமைகள், டிக் டாக் துயரங்கள் ஆகியவை குறித்தும் கோலம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்.
நாளொன்றுக்கு 50 முதல் 100 பேர் வரை நான் வரைகின்ற கோலத்தைப் பார்த்துவிட்டு அதிலுள்ள வாசகங்களை வாசித்துச் செல்கிறார்கள். இந்தப் பணியை நான் தொடர்ந்து செய்வேன்" என்றார்.
இதையும் படிங்க: 'மாநில அரசு கேட்கும் பங்கை வட்டிக்கடைகாரர்கள்போல் மத்திய அரசு யோசித்து கொடுக்கிறது'