தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்தும் அகழாய்வுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் கு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் துறை மனித தோற்றம் புலப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி மரபணு அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது என்றும் அத்துறையின் பேராசிரியர் முனைவர் பிச்சப்பன் இது குறித்த உலகளாவிய ஆய்வுகளை மேற்கொண்டு பெயர் பெற்றவர் எனவும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டுவரும் அகழாய்வு பணிகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் கைகோர்த்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றார். இதன் மூலம் அந்த அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வழியாக அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கரிம பகுப்பாய்வு செய்யப்படும் அதன் முடிவுகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெற்று தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு வழங்கும் எனவும் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக தற்போது மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கீழடி அகழாய்வு பணிகளிலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஈடுபட உள்ளதாகவும், இதற்காக தொல்லியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு முத்தரப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட உள்ளது என்றார்.
அகழாய்வில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு அவரவர் தங்களது கருத்துக்களை கூறும் நிலையை மாற்றி அதிகாரப்பூர்வ முடிவு மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வழியாக தமிழ்நாடு தொல்லியல் துறை வழங்கும் எனவும் துணை வேந்தர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பிச்சப்பன், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறப்பாக மேற்கொண்டு அகழாய்வு பணிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தையும் இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இது பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த பெருமை என்றும் துணை வேந்தர் கு.கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.