மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் சண்முகராஜா, முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை ஜாதி பெயர் சொல்லியும், உருவ கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருந்தார்.
அதில், "மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறேன். நான் பட்டியல் சமூக மாணவி என்பதால் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சண்முகராஜா என்பவர் தொடர்ந்து எனது ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் எனது உருவத்தையும் கேலி செய்து வருகிறார்" என தனது புகாரில் கூறியுள்ளார்.
மேலும், வகுப்பறையில் தனது உருவத்தை வரைந்து பேராசிரியர் கேலி செய்ததாகவும், இச்சம்பவம் குறித்து கடந்த மாதம் பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர் ஆகியோரிடமும் புகார் அளித்ததாகவும், பின்னர் "புகார் அளித்தவர்களை நான் சும்மா விட மாட்டேன்" என அந்தப் பேராசிரியர் மிரட்டியதாகவும் மாணவி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜாவை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பேராசிரியர் சண்முகராஜா மீது கடந்த 2011ஆம் ஆண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் அப்போது இருந்த ஆளுநருக்குப் புகார் கடிதம் ஒன்றும் அனுப்பியிருந்தனர். இதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து உரிய விசாரணை நடத்த காமராஜர் பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டியல் சமூக மாணவியை ஜாதி பெயர் சொல்லியும் உருவத்தை கேலி செய்த வரலாற்றுத் துறை பேராசிரியரைப் போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அடையாறு கலாஷேத்ரா பாலியல் புகார்; தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரகசிய விசாரணை