இது தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், "பல்கலைக்கழக பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த சாதனையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிகழ்த்தியுள்ளது. முதல் பத்து இடங்களுக்குள் கண்டிப்பாக பல்கலைக்கழகம் முன்னேறும்.
இந்த தரவரிசை முன்னேற்றத்தின் மூலமாக உலகப் பல்கலைக் கழகங்களின் வரிசையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இடம் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு கிடைக்கும்.
மதுரை போன்ற பண்பாட்டு பெருமைமிக்க நகரத்தில் இயங்க கூடிய பல்கலைக்கழகம் என்பதால் இந்த ஆண்டு எம் எஸ் சி கல்ச்சுரல் இன்பர்மேட்டிக்ஸ் என்ற புதிய வகை படிப்பை தொடங்கி இருக்கிறோம். மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொன்று தொட்டு நிலவி வருகின்ற கலாச்சாரத்தை பண்பாட்டை அறிந்து படிக்கின்ற ஒரு கல்வி வாய்ப்பாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
மத்திய மாநில அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ரோஸ்டர் சிஸ்டத்தின் அடிப்படையிலேயே தகுதியை முதன்மையாகக் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார்.