நாடு முழுவதும் உள்ள உழைப்பாளர்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினதன்று சில நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து சன்மானமும் வழங்குகின்றன. ஆனால் மதுரையில் உள்ள நெல்பேட்டை என்ற தனியார் உணவகம், மே தினத்தன்று தங்களுடைய ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள ஏழை எளிய தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் புதிய விதமான ஏற்பாட்டை செய்தது.
அதன்படி அந்த உணவகத்தில் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணியை, மே தினமான நேற்று ஒன்பது ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்தது. விற்பனையின் போது போட்டி ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மூன்று தினங்களுக்கு முன்பாகவே ஒருவருக்கு இரண்டு டோக்கன் என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மதுரையில் உள்ள அந்த உணவகத்தின் மூன்று கிளைகளிலும் நேற்று ஒன்பது ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், மதுரையை சுற்றியுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தொழில் செய்யும் தொழிலாளர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பிரியாணியை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளிள் மட்டும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.