மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், தசரா திருவிழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், “குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பார் நடன மங்கையர், துணை சினிமா நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து, சினிமா பாடல்களுக்கு ஆடும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.
நடிகர், நடிகைகள் அரை குறை ஆடைகளுடன் ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் நன்மதிப்பை குறைக்கிறது. மைசூர் போல் பல வெளி நாட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய தசரா ஆன்மிகத்திருவிழாவின் மதிப்பு, சிலருடைய செயல்களால் குறைந்து வருகிறது.
எனவே, ஆன்மிக நிகழ்ச்சியான குலசை தசரா நிகழ்ச்சிகளில் பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்துப்பாடல்கள் பாடவும், ஒலிபரப்பி ஆடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப் 14) நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குலசை தசரா விழாவின் போது பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும், ஆடவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணித்து, பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் கோயில் திருவிழாக்களில், ஆபாச நடனங்கள் ஆடுவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடல் விவகாரம் - அலுவலக மேலாளர் நேரில் விளக்கம்