மதுரை: கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் கல்குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம், புகலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குப்பம் பவித்திரம், க.பரமத்தி பகுதிகளில் 13 கல்குவாரிகளில் கடந்த பல வருடங்களாக உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக நடைபெறுகிறது.
சுமார் 13 நிறுவனங்கள் சட்ட விரோதமாக கற்களை உடைத்து எடுப்பதற்கு ஆபத்தான முறையில் வெடிப் பொருட்கள் மூலம் பாறைகளை தகர்த்து வருகின்றனர். இதனால், ஏற்படும் தூசி மற்றும் கற் சிதறல்கள் அருகில் வசிக்கும் மக்களின் உடல்நலானி பாதிக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிகளை பின்பற்றாமல் கல் குவரிகளை சட்ட விரோதமாக நடத்துகின்றனர்.
எனவே, சட்ட விரோதமாக அனுமதியின்றி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து, அதனை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், "கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு விதிகள் பின்பற்றாமல் இயங்கிய 31 குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!