திருமங்கலம் அருகே உள்ள பாப்பான்குளம் கண்மாயில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி இரவு அங்கு மணல் திருட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு விரைந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், அங்கிருந்த மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இசக்கி என்பவரைக் கைது செய்தனர். இதையடுத்து, இசக்கி என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், லாரி ஓட்டுநர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக், மதுரை மேலக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கார்த்திக் மற்றும் செந்தில் தங்களுக்கு இந்த வழக்கில் முன் பிணை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் . இந்த மனுவானது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அவர், " முன் பிணை கோரிய இருவரும் தலா 7, 500 ரூபாய் வீதம் 15,000 ரூபாயை, மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்குச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைக் கொண்டு, அங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்பு உயர் நீதி மன்ற நீதிபதி ராஜா ஆய்வு மேற்கொண்ட போது, கழிவறை மற்றும் அறைகள் பராமரிப்பில்லாமல் இருப்பது தெரியவந்தது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூர்நோக்கு இல்லங்களை , அப்பகுதி உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு, கூர்நோக்கு இல்லத்திற்கு துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டு, இருவருக்கும் முன் பிணை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, ''கூர் நோக்கு இல்லத்தில் கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி இல்லத்தின் கண்காணிப்பாளர், அதற்கான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!