மதுரை: கரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் காரணம் எனச் சித்திரிக்கும் வகையில் மாரிதாஸ் காணொலி ஒன்றை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் காணொலி தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் மாரிதாஸுக்கு எதிராகக் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அன்று 292-ஏ, 295-ஏ, 505 (2), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 என நான்கு பிரிவுகளின்கீழ் மாரிதாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தன் மீதான விரோதத்தின் காரணமாகப் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்துசெய்யக் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக டிசம்பர் 21 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரிதாஸ் தரப்பில், இந்த வழக்கில் பிணை கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி, வழக்கு குறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக இன்று (டிசம்பர் 23) ஒத்திவைத்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "மனுதாரர் காணொலிப் பதிவில் யாரையும் இழிவுப்படுத்தும் விதத்திலும், எந்த மதத்தினரையும் குறிப்பிட்டும் பேசவில்லை.
இஸ்லாமிய நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலோ, இழிவுப்படுத்தும் விதமாகவோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே மாரிதாஸ் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 292-ஏ, 295-ஏ, 505-2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது, வழக்கு ரத்துசெய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு செக்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!