தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரை கிளை
திருநெல்வேலி ரயில் நிலைய நடைபாதையில் வழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அகற்ற கோரி வழக்கில் தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முகமது அய்யூப் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தென் தமிழகத்தில் திருநெல்வேலி ரயில் நிலையம் மிகவும் முக்கியமான சந்திப்பாகும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு, விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரானைட் கற்களில் மழைகாலங்களில் அல்லது ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும்போது தண்ணீர் தேங்கி பயணிகள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அகற்றிவிட்டு, நடைபாதைகளில் நடக்கும்போது வழுக்காத வண்ணம் உள்ள சொரசொரப்பு கற்களை பாதிக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, வழக்கு குறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்