தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வட்டார வீல் திட்டத்தில் பணியாற்றும் டாக்டர் தீபிகா லின்சி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மருத்துவ படிப்பை முடித்து, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் லூர்தம்மாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்தேன். கடந்த 2016ஆம் ஆண்டுவரை அங்கு பணியாற்றினேன். 2016ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்த மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை அங்கு பணியாற்றினேன். தற்போது, புதுக்கோட்டை வட்டார வீல் திட்ட மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். இந்த மருத்துவமனை கிராமப்புற மருத்துவமனையின் கீழ் உள்ளது. முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் 1200 க்கு 426 மதிப்பெண் பெற்றுள்ளேன்.
கிராமப்பகுதியில் பணியாற்றினால் ஆண்டுக்கு 5 மதிப்பெண்ணை ஊக்க மதிப்பெண்ணாக வழங்க வேண்டுமென அரசாணை கூறுகிறது. கிராமப்புற கணக்கீட்டின்படி நான் 3 ஆண்டுகள் 4 மாதங்கள் பணியாற்றியுள்ளேன்.
கடந்த முறையும் இதேபோல் ஊக்க மதிப்பெண் கணக்கிடப்படவில்லை. அதைப்போலவே இந்த முறையும் ஊக்க மதிப்பெண் வழங்காமல் என்னை நிராகரித்துள்ளனர். எனவே, எனக்குரிய ஊக்க மதிப்பெண்ணை வழங்கி முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் எனக்கு வாய்ப்பு வழங்கவும், எனக்காக ஒரு சீட்டை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் வழியே விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரருக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு செயலர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், நாளை ஆன்லைன் வழியாக நடைபெறும் கவுன்சிலிங் மூலம் மனுதாரர் பங்கேற்று விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்