ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "போர்வெல்லை பயன்படுத்தும் ஆதிதிராவிடர் விவசாய சங்கத்தின் தலைவராக உள்ளேன். எங்கள் சங்கத்தில் 177 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகளத்தூர், கமுதி, தாலுகாவில் பரவலாக விவசாயம் செய்து வருகிறோம்.
இதனை நம்பி சுமார் 600 ஆதிதிராவிட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதி மழை மறைவு பகுதியாகும். இதனால், நிலத்தடி நீரை வைத்து விவசாயம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களது விவசாய நிலங்களில் அமைக்கப்படும் போர்வெல்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 100 விழுக்காடு மானியம் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், ஏற்கனவே ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் விவசாய நிலத்தில் போர்வெல் அமைப்பதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், உரிய பயனாளிகள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.