மதுரை வழக்கறிஞர் தமிழ் மலர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "மதுரையை சேர்ந்த தாரை செல்வன் என்பவரின் மகள் குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ். இவர் பல் மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் இஸ்லாம் மதத்தின் மீதான ஈர்ப்பால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உதவியுடன், இந்து மதத்தை சார்ந்த இவர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார். இந்தத் தகவலை அறிந்தவுடன், இவரது பெற்றோர் இவரை வீட்டில் சிறை வைத்தனர்.
இதற்கிடையே இவர் வீட்டில் இருந்து தப்பி, ஜமையத்துல் வகிலில் குரான் வல் ஹதீஸ் என்ற இஸ்லாமிய அமைப்பின் உதவியை நாடினார். ஜன்னதுல் பிர்தொஸ் தனக்கு பாதுகாப்பும், அடைக்கலமும் கேட்டார். குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் குறித்து அவரது பெற்றோர் மதிச்சியம் காவல் நிலையித்தில் புகார் கொடுத்தனர். இதே போல், ஜன்னதுல் பிர்தொஸ் போலீசாருக்கு ஒரு மனுவை அனுப்பினார். அதில் பெற்றோர்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில் போலீசார், ஜன்னதுல் பிர்தொஸ் மதுரையில் உள்ள பேட்ரிக் என்ற காப்பகத்தில் தங்க வைத்தனர். இவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தாமல், சட்ட விரோதமாக தங்க வைத்துள்ளனர். தனக்கு பிடித்த மதத்தை தழுவுவது என்பது அவரவரின் விருப்பம், தனி நபரின் உரிமை எனவே போலீசார் சட்டவிரோதமாக காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவரை விடுதலை செய்ய வேண்டும். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள், சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், காப்பகத்தில் சட்ட விரோதமாக வைத்துள்ள பெண்ணுக்கு 27 வயதாகிறது. அவர் தன் விருப்பப்படி சுதந்திரமாக எந்த மதத்தையும் பின்பற்றலாம், அவர் விருப்பப்படி இருக்கலாம். எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரினார். இதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு தரப்பு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், காப்பகத்தில் உள்ள குந்தவை நாச்சியார் என்ற ஜன்னதுல் பிர்தொஸ் விடுவிக்கப்பட வேண்டும். அவர் சுதந்திரமாக எங்கு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.