மதுரை: மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தை காரணமாக, முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மன்னிப்பு அடிப்படையில், மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”மேலூர் அருகே உள்ள கே.முத்துவேல்பட்டி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மேலவளவு பஞ்சாயத்து 1996 ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட பிரிவாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் மேலவளவு ஊராட்சி தலைவராகவும், இறந்த மூக்கன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த ஜூன் 30, 1997 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இந்த பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து, ஆயுள் தண்டனை கைதியான சேகர், வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனையை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, கடந்த 2019 ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தற்போது சட்ட நிபந்தனைகளை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, அக்டோபர் 12, 2023 ஆம் ஆண்டு சேகர் குற்ற செயலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு, காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. எனவே, மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில், முன்விடுதலை செய்யப்பட்ட சேகரின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று (ஜன.2) விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில், மனு குறித்து தமிழக உள்துறை செயலாளர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது மோடி கோஷம்..! கைகளை அசைத்து சைகைக் காட்டிய பிரதமர்..!