மதுரை: மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம், 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு இதற்கான, எழுத்துத் தேர்வு 2022ஆம் ஆண்டு ஜுலை 24ஆம் தேதி நடைபெற்றது.
இத்தேர்விற்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். மேலும் பின்னர் குரூப் 4 பணியிடங்கள் 7,381-லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த குரூப் 4 தேர்வுக்கு நாங்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கான அனுமதிசீட்டு பெற்று தேர்வு எழுதினோம். குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. இந்த தேர்வை பொறுத்தவரை, நாங்கள் 255 மதிப்பெண்கள் மேல் பெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குரூப் 4 தேர்வில் விடைத்தாள் (ஓஎம்ஆர்) மோசடியும், குழப்பமும் நடைபெற்றுள்ளது. எனவே, என்னுடைய வினாத்தாளை (ஓஎம்ஆர்) எங்களுக்கு வழங்க வேண்டும், அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என தங்களது மனுக்களில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் வெளியிடவில்லை என்றால் உடனடியாக குரூப் 4 தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைத்தாள் (Answer key) வெளியிட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை இன்று சமர்பிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (அக்.11) விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது, நேற்று குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியிடப்பட்டதாக TNPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களுக்கு ஓம்ஆர் விடைத்தாளை ஒரு வாரத்தில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சியில் உரிய மதிப்பெண் இருந்தும் நிராகரித்தது ஏன்? - நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி கருத்து