கன்னியாகுமரி மாவட்டம், குள்ளத்தூரைச் சேர்ந்த விசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "நான், நாகர்கோவிலில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, கீழ்குளத்தூரில் ஆதி திராவிடர் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து குளத்தூர் ஆதி திராவிடர் காலனி வழியாக பாசனத்திற்காக பறக்கை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பலப்படுத்துவதற்காக தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்புச் சுவர் மீதும், கழிவு நீரோடை மீதும் அங்குள்ளவர்கள் கட்டடம் கட்டியுள்ளனர். மேலும் பொது இடத்தை ஆக்கிரமித்தும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சட்டத்துக்கு புறம்பாக அங்கு அடுக்குமாடிக் கட்டடம் கட்டி வருவதால், பறக்கை கால்வாய் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து, கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது.
அது மட்டுமின்றி, அருகில் உள்ள குடியிருப்புகளும் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும் பலன் இல்லை. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும் அரசியல் பலத்தினால் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆகவே பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, "அகஸ்தீஸ்வரம் கால்வாயினை வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் நான்கு வாரத்தில் அவற்றை அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க : சாத்தான்குளம் லாக்கப் மரணம் - கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்