சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ் குமார் தாக்கல் செய்த பொதுநலமனுவில், “2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் நகரமாக மதுரை வளர்ச்சிப் பெற்று வருகிறது. இந்திய அளவில் 44 ஆவது இடத்தில் வளர்ச்சிப் பெற்ற நகரமாக வளர்ந்து வருகிறது.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழ்நாடு, கர்நாடகா மக்களும் பயன் பெறவுள்ளனர். மிகவும் பழமையான மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது.
மதுரை விமான நிலையம், கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு வரை உள்நாட்டு விமான நிலையமாகச் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட சில வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளன. தற்போது 17 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
மதுரையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. மேலும், பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் அந்நாட்டிலிருந்து மதுரைக்கு விமான சேவை இயக்கத் தயாராக உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது.
பழைய முனையும் தற்போது சரக்கு போக்குவரத்தை கையாளும் முனையமாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டில் அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்தில் 36 இடத்தில் உள்ளது. மேலும், இந்த விமான நிலையம் ISO 9001 -2015 சான்றிதழ் பெற்றுள்ளது. மதுரையை விட சிறிய விமான நிலையமாகவுள்ள உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள குஷிநகர் விமான நிலையம், திருப்பதி விமான நிலையங்கள் போன்றவை பன்னாட்டு விமான நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டன.
எனவே மதுரை விமான நிலையத்தையும் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் குரல் எழுப்பியும், எந்த பயனும் இல்லை. எனவே, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பு செய்து, மேம்படுத்த வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் சிவஞானம், S. ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தலாம்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் கடைசி வாரம் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஏன் 144 தடை உத்தரவு... தெளிவுபடுத்தாவிட்டால் ரத்து - நீதிமன்றம் எச்சரிக்கை