மதுரை: புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.
அதில், “முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள புதுதாமரைப்பட்டி கிராமத்தில், சுமார் 300 ஏக்கர் விவசாய பாசன நிலங்கள் உள்ளன. இவற்றுக்கு பெரியார் வைகைநீர் வடிகால் வாய்க்கால் மூலமாக நீர் வந்துசேர்கிறது. இந்த நீர்தான் முழுமையாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஆட்சியர், ஆணையர் குறித்து அதிருப்தி
இந்நிலையில் இந்தக் கிராமத்தில் குடியிருப்புகளைக் கட்டிவரும் விஎன்-சிட்டி என்னும் நிறுவனம், குடியிருப்புகளைச் சுற்றி பெரிய சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளது. இந்தச் சுற்றுச் சுவரானது வைகை நீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அத்துடன் குப்பைகளைக் கொட்டி வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது நல்ல மழை பெய்தும் நீர் வராததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் விவசாயிகளின் வாழ்வாதாரமான வைகை நீர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நேற்று (நவம்பர் 23) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆக்கிரமிப்பு படங்கள், வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றை நீதிபதிகளிடம் தாக்கல்செய்தார்.
இதனைக் கண்டு கோபமடைந்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும் மனுதாரர் தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் முன்னிலையாக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசுத் தொகை: அரசாணை வெளியீடு