மதுரை: தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகக் கருதப்படும் மதுரையில், மேயருக்கான போட்டியில், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோரோடு அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய உறவினருக்காகக் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகிறார். இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நகராட்சியாக இருந்த மதுரை, 1971ஆம் ஆண்டு, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்து. பின்னர் 65 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி, 1991ஆம் ஆண்டு, வார்டு சீரமைப்புக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 72 வார்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டது.
பெண் மேயர்
இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த குழந்தைவேலுவும், 2001ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த சே. ராமச்சந்திரனும் மேயராகத் தேர்வுசெய்யப்பட்டனர். பின்பு 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் மேயராகத் தேன்மொழி கோபிநாதன் தேர்வுசெய்யப்பட்டார்.
இதற்கிடையே 2011ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு ஐந்தாவது முறையாக நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா மேயராகத் தேர்வானார்.
2011-க்குப் பிறகு தற்போதுதான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது பொதுப்பிரிவில் பெண்களுக்கான மேயர் பதவி மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தேன்மொழி கோபிநாதனுக்குப் பிறகு இரண்டாவது பெண் மேயர் மதுரை மாநகராட்சிக்குத் தற்போது தேர்வுசெய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த மதுரை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 80 விழுக்காடு இடத்தைக் கைப்பற்றியுள்ளன. இதனால் திமுகவில் மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டி மிகக் கடுமையாக நடைபெற்றுவருகிறது.
களமிறங்கும் அமைச்சர்கள்
இதில், உள்ளூர் அமைச்சர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுக்கு அப்பதவியைக் கைப்பற்றுவதில் கடும் முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தப் போட்டியில் முன்னாள் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜய மெளஸ்மி, திருப்பாலை சசிகுமார் மனைவி வாசுகி, ஆனையூர் திமுக பகுதிச் செயலாளர் பொம்மத்தேவன் மகள் ரோகிணி, எல்லீஸ் நகர் பகுதிச்செயலாளர் முருகன் மனைவி பாமா ஆகிய நான்கு பேர் திமுகவில் மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் தீவிரத்துடன் உள்ளனர்.
வாசுகி, ரோகிணி ஆகியோர் அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர்கள் ஆவர். பாமா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர். இந்தப் போட்டியில் ரோகிணி அமைச்சர் தங்கம் தென்னரசு உறவினர் என்பதால், மதுரை மேயர் பதவியைக் கைப்பற்ற அவரும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.
ரோகிணிக்கு வாய்ப்பு
இதற்கிடையே திமுக தலைமை எதிர்பார்க்கும் 'நிதி'யை நிறைவேற்றும் முழு செல்வ பலம் கொண்டிருப்பதாலும், இந்திய ஆட்சிப் பணி சார்ந்த குடும்பம் என்பதாலும் ரோகிணிக்கான வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
ஆகையால், மதுரை மாநகராட்சி மேயருக்கான போட்டியில் அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாக அமைச்சர் மூர்த்தி வெற்றிபெற அநேக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. வருகின்ற மார்ச் நான்காம் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தல் இந்த ரிலே ரேஸை முடிவுக்குக் கொண்டுவரும்.
மேலும் துணை மேயருக்கான பதவியைக் கைப்பற்றுவதிலும் வெற்றிபெற்ற திமுக ஆண் கவுன்சிலர்கள் இடையே போட்டி நிலவுகிறது.
இதில் 40ஆவது வார்டில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து வென்ற திமுகவைச் சேர்ந்த துரைப்பாண்டியன் பெயரும், நீண்ட காலமாகக் கட்சியின் பொறுப்பில் இருந்துவரும் 52ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயராமனின் பெயரும் உள்ளன. இந்நிலையில் துணை மேயருக்கான அதிகபட்ச வாய்ப்பு ஜெயராமனுக்கு இருப்பதாகக் கட்சியினர் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி பட்டாசு தொழிற்சாலை விபத்து: நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு