திருப்பரங்குன்றம் தொகுதியில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்னும் சில வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆட்சியர் நாகராஜனிடம் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, “இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்னும் பல வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் சென்று சேரவில்லை. இத்தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகம் விரைவாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.
மேலும், திருப்பரங்குன்றம் பகுதியில் திமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் அலுவலம் திறப்பதற்கு அனுமதி வழங்காததை சட்டப்படி சந்தித்திப்போம் என்று அவர் அப்போது தெரிவித்தார்.