மதுரை: இன்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் ஆர்வமுடன் கலந்துகொண்டு 100 விழுக்காடு வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் வகையில் கோலமிட்டனர். அதனை ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டு பாராட்டினார்.
பின்னர் தொடர்ந்து ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழையும் மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அன்பழகன், "மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை போற்றும் வகையிலும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அனைவரும் தவறாமல் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை, மேலும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றதுவருகிறது" என்று கூறினார்.