மதுரை அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது. வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழா நேற்று நடைபெற்றதன் தொடர்ச்சியாக ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் நேற்றிரவு வண்டியூர் வீரராவகப்பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தவளை முனிவருக்கு சாபவிமோசனம்: இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்து இன்று காலையில் சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே வண்டியூர் வைகை ஆற்றில் அமையப்பெற்றுள்ள தேனூர் மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு நாரைக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வும், தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தப்படும் நிகழ்வும் நடைபெற்றது.
இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தவளையாக இருந்த சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில் முனிவரின் உருவம் அருகில் வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாரை வானில் பறக்கவிடப்பட்டது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார். இன்றிரவு இராமராயர் மண்டபகத்தில் விடிய விடிய பல்வேறு தசாவதார திருக்கோலங்களில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் .
இதையும் படிங்க: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: கோவிந்தா.. கோவிந்தா என்று மனமுருகி முழங்கிய மக்கள்; சிலிர்த்துப்போன வெளிநாட்டவர்கள்!