புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த மருத்துவர் இளந்தென்றல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் எம்பிபிஎஸ் முடித்து ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன்.
கடந்த 2019 டிசம்பரில் நடைபெற்ற முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 28வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
மருத்துவ மேற்படிப்பில் சேர எனது சான்றிதழ்களை கேட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் மனு அளித்தேன்.
அதற்கு 20 லட்ச ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என்றார். வங்கிக்குச் சென்றால் 20 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தினால் மட்டுமே உத்தரவாத சான்றிதழ் தருவதாக தெரிவிக்கின்றனர்.
மருத்துவ மேற்படிப்பு முடித்த பிறகு தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதாக உறுதி அளித்தும், வங்கி உத்தரவாத சான்றிதழ் கேட்பது சரியல்ல. இந்த நிபந்தனையால் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் மருத்துவ மேற்படிப்பில் செல்லும் அரசு மருத்துவர்கள் சான்றிதழ்களை பெற 20 லட்சம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணன்," மனுதாரர் அரசாணையை ரத்து செய்யக் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரருக்கு உத்தரவாதத்தை வழங்க கால நீட்டிப்பு வழங்கலாம்.
மனுதாரர், அவருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, 7 மாதம் பெற்ற கல்வி உதவித் தொகைக்கு முன்தேதியிட்ட காசோலையை வழங்க வேண்டும். 24 மாதங்களுக்கு மாதம் 15 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும்.
இதற்காக முன்தேதியிட்ட காசோலை வழங்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் உடனடியாக மனுதாரருக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.