நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்த முருகன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "எங்கள் ஊரில் உள்ள வடக்குவாசல் செல்வியம்மன் கோயிலின் டிரஸ்டியாக இருந்தவர் குற்றசாட்டுகளின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள தென்காசி இலஞ்சி குமாரர் கோயில் செயல் அலுவலர் தக்காராக நியமிக்கப்பட்டார்.
கோயிலின் ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவற்றை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிரஸ்டி, தற்போது வரை தக்காரிடம் ஒப்படைக்கவில்லை. அதே நேரம் தக்காரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக நிர்வாகத்தினர் இன்றி கோயில் இயங்கி வருகிறது.
இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தாமிரபரணி வெள்ளநீர் பாசன கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பங்களிப்பு தொகை கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்படும். எனவே, வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் நிர்வாக நடைமுறைகளை முறையாக மேற்கொள்ளவும், கோயிலின் அசையும், அசையா சொத்துக்களை மீட்டு, அறநிலையத்துறை நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, கோயிலுக்கு சொந்தமான 22.7 ஏக்கர் நிலத்தில் மணல் குவாரி, புளு மெட்டல், உள்ளிட்டவை சட்டவிரோதமாக 100 அடி ஆழத்திற்கு வெட்டி எடுத்துள்ளனர். இக்கோயிலின் சிலைகள் கடத்தப்பட்டுள்ளது. எனவே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிர், தொடர்புடைய கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, சிலைகள் திருடப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
மேலும், கோயில் நிர்வாகத்தில் ஏன் இந்த குளறுபடி என்பது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் / ஆணையர், கனிம வளத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.