மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப் பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர்.
நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது. இந்தநிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவற்றை அரசாங்கம் கட்டியது. இதனால் தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் குறைந்ததால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அமையும். எனவே நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நலக்காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று (மார்ச்.7) விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தனியார் பள்ளிகளில் இது போல நெருக்கடியாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் அரசு, அரசுப் பள்ளிகளில் மட்டும் தன் நிலைப்பாட்டை மாற்றுவது எப்படி? என கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார். அதுவரை நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நலக் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்...