மதுரை: பழனி சிவானந்தா புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் வருடா வருடம் நடைபெறும் நவராத்திரி விழா அன்று கோயில் நிர்வாகம் தரப்பில் மரியாதையோடு அழைக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யப்படும். கடந்த வருடம் வரை புலிப்பாணி கரூர் வழி வாரிசுகளுக்கு தண்டாயுதபாணி கோயில் சார்பாக நவராத்திரி விழா அன்று மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்யப்பட்டது.
ஆகவே. இந்த வருடம் அக்டோபர் 15 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள நவராத்திரி விழாவை ஒட்டி பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பாக வழங்கப்படும் மரியாதையை அளிக்க உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பாக யாருக்கும் சிறப்பு முதல் மரியாதை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார். அதேநேரம், கட்டளைதாரர்களுக்கு என்ன மரியாதை வழங்கப்படுமோ, அந்த மரியாதை மனுதாரருக்கு வழங்கப்படும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: அக்.1 முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல தடை!