31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, மதுரையில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில், போக்குவரத்து பணியாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம், மது அருந்துவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது உட்பட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரோஜாப் பூ கொடுத்தும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விழிப்புணர்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், விலை மதிக்க முடியாத உயிரையும், உடலையும் பாதுகாக்கும் அடிப்படையில் சாலை பாதுகாப்பு விழா நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அனைத்து இடங்களிலும் இவ்விழா நடைபெற்று வருகிறது என்றார்.
தொடர்ந்து, இதுவரை இல்லாத வகையில் சாலை பாதுகாப்பிற்காக முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாணவர்கள் அதிவேக மோட்டார்களை விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்த விழிப்புணர்வே வேக தடையாக அமையும் என்றார்.
இதையும் படிங்க: 'எந்த அழிவு திட்டத்துக்கும் இங்கு அனுமதி கிடையாது' - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்