மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு அலங்காநல்லூரில் உள்ள பல்வேறு கோயில்களின் காளைகள் சம்பிரதாய அடிப்படையில் அவிழ்த்து விடப்பட்டன. 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் 500 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 810 காளைகள் வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயங்கள், சைக்கிள், பித்தளை பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. அவ்வப்போது சிறப்பாக மாடு பிடித்த வீரர்களுக்கும் காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பவுன் தங்க மோதிரத்தை அணிவித்து அவர்களை ஊக்குவித்தார்.
ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகை தந்து பார்வையிடும் மாடத்தில் பெரும் தள்ளுமுள்ளு நிலவியது. இதன் காரணமாக பல வெளிநாட்டவர் வெயிலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் பார்வையிடக்கூடிய மாடத்திலும் இதேபோன்று சிக்கல் இருந்ததாக ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் போட்டியில் களத்தில் நின்று விளையாடும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கரூர் வெள்ளை மாடு கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் வாடியில் இருந்து வெளியே வரத் தயங்கி நின்றது. சில மணித்துளிகள் அதிகமானதால் காளையின் உரிமையாளரை கயிறு போட்டு வெளியே இழுத்து வரச் செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்த காளைக்கென்று ஜல்லிக்கட்டில் தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. அதேபோன்று நடிகர் சூரியின் காளை அவிழ்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் மேடையில் இருக்கும் போது அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக தனது பயணத்தை தள்ளி வைத்து அமைச்சர் உதயநிதி ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் வேறொரு பெயரில் அந்த காளை வெளியேறி சென்று விட்டதை அறிந்து அவர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் நடிகர் சூரியின் காளை என்று அறிவிக்கப்பட்டு அவிழ்க்கப்பட்ட அந்த காளை வெற்றி பெற்றது.
10 சுற்றுகளின் நிறைவில் 18 காளைகளைப் பிடித்த மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சார்பாக வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார்.
மதுரை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 17 காளைகளைப் பிடித்து 2ஆவது இடம் பெற்றார். அவருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று களத்தில் நின்று விளையாடிய காளையின் உரிமையாளர் திருச்சியைச் சேர்ந்த குணா என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார். 2ஆவது பரிசான ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை, மதுரை காமராஜபுரம் சேர்ந்த வெள்ளைக்காளி செளந்தர் என்ற காளை உரிமையாளர் வென்றார்.
பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கி பாராட்டினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியின் போது மாடுபிடி வீரர்கள் 31 பேரும், மாட்டு உரிமையாளர்கள் 18 பேரும், பார்வையாளர்கள் 27 பேரும் காவல்துறையினர் 6 பேரும், ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் ஒருவரும் என 83 பேர் காயமடைந்தனர். இவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி, நடிகர் அருண் விஜய், திரைப்பட இயக்குனர் விஜய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர்.
பரிசளிப்பிற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாடு பிடி வீரர் அபிசித்தர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகள் பிடித்ததாக கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தானே அதிக காளைகள் பிடித்ததாகவும், இதுகுறித்து வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருகடையூரில் உலக புகழ் பெற்ற ரேக்ளா ரேஸ்; இரு புறங்களில் குவிந்த பொதுமக்கள்..!